பள்ளி மாணவி பலாத்காரம்; சித்தப்பாவுக்கு 7 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடலூர்,
திட்டக்குடி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் உள்ள பள்ளியில் 14 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தாய் கூலி வேலைக்காக கேரளாவுக்கு சென்றிருந்தார். இதனால் அந்த மாணவி தனது அண்ணன், தம்பியுடன் சேர்ந்து அதே ஊரில் உள்ள தனது சித்தப்பா சரவணன் (வயது 26) வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த 17.8.2019 அன்று இரவு வீட்டில் மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சரவணனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தூங்கிக்கொண்டிருந்த மாணவிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த மாணவியை பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
7 ஆண்டு சிறை
இதனால் அவர் வெளியே சொல்லவில்லை. இதையடுத்து கடந்த 24.9.2019 அன்று மீண்டும் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி அந்த மாணவி விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அதில், இவ்வழக்கில் சரவணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.
Related Tags :
Next Story