பள்ளி, கல்லூரிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்


பள்ளி, கல்லூரிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 1 Sept 2021 10:48 PM IST (Updated: 1 Sept 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

கடலூர், 

கொரோனா

கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதில் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. இதனால் அவர்கள் எப்போது பள்ளிக்கூடங்கள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். பெற்றோர்களும் இதே மனநிலையில் இருந்து வந்தனர்.
இதற்கிடையில் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு தீவிர பரிசீலனைக்கு பிறகு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் இதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க உத்தரவிட்டது.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 230 அரசு பள்ளிகள், 137 மெட்ரிக், 26 சி.பி.எஸ்.இ.பள்ளிகள் மற்றும் நகராட்சி, ஆதிதிராவிடர் நல பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்பட மொத்தம் 469 பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.
கடந்த 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் வெப்பநிலை பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்பதை அறிந்து, அதன்பிறகே அனுமதித்தனர். முக கவசம் அணிந்தபடி அனைத்து மாணவர்களும் வந்தனர். முக கவசம் அணியாத மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது.

20 மாணவர்கள்

இதை பெற்ற மாணவர்கள் அதை அணிந்து கொண்டு தங்களுடைய வகுப்பறைக்கு சென்றனர். சானிடைசர் வழங்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்தனர். வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டனர். ஒரு மேஜையில் 2 மாணவர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள், இணைப்பு பாடங்களை கற்றுக்கொடுத்தனர்.
கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுழற்சி முறையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.  வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணிக்கு முடிவடைந்தது.

கூட்டம்

ஏற்கனவே பள்ளி வளாகம், வகுப்பறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.
5 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால், பஸ் நிலையங்களில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வேன், ஆட்டோக்களிலும் மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறிச்சென்றதையும் பார்க்க முடிந்தது.

கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதைபோல், கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் நேற்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. கடலூரில் பெரியார் அரசு கல்லூரிக்கு 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்தது.
இதற்காக மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வற்காக திரண்டனர். பின்னர் அவர்களை சமூக இடைவெளி விட்டு அமருமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர். முக கவசம் அணிந்தபடி இருந்த 350 மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி முகாம்

ஆனால் இந்த கல்லூரியில் உள்ள சில வகுப்பறைகளில் கொரோனா வார்டு உள்ளதால், அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த வார்டை வேறு இடத்திற்கு மாற்றி, வகுப்பறைகளை மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக தூய்மை பணிகளை செய்து, கல்லூரி நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் புனித வளனார் கல்லூரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை வேலூர் மண்டல கல்லூரி இணை இயக்குனர் ராமலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கே.என்.சி. கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வருகை தந்தனர்.

Next Story