தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.
தேனி:
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளும் 50 சதவீத மாணவ, மாணவிகளுடன் திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் 225 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 66.27 சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர். அதுபோல், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
உற்சாகம்
பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பெரும்பாலான மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். முக கவசம் அணியாமல் வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் முக கவசங்களை வழங்கினர். வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் அமர்ந்தனர். முதல் நாளில் பாட வகுப்புகள் நடத்தப்படவில்லை. கொரோனா விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் நன்னெறி கதைகளை ஆசிரியர்கள் போதித்தனர். மாணவ, மாணவிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் ஆசிரியர்கள் மற்றும் சக நண்பர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தேர்வு வாரிய தலைவர் ஆய்வு
பள்ளிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா தேனிக்கு நேற்று வந்தார். கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னமனூர், கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா, மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பள்ளிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? அனைவரும் முக கவசம் அணிந்துள்ளார்களா? என அவர்கள் ஆய்வு செய்தனர்.
அதுபோல் கல்லூரிகளுக்கும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை பேராசிரியர்கள், பேராசிரியைகள் வரவேற்றனர். மாணவ, மாணவிகள் சக நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்க நலம் விசாரித்துக் கொண்டனர். தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் நாள் வகுப்புக்கு வந்த மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் சித்ரா கொரோனா விழிப்புணர்வு குறித்தும் வாழ்வியல் நன்னெறிகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினார். மற்ற கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டன.
Related Tags :
Next Story