ஆட்டோவை துரத்தி சென்றபோது விபத்தில் சிக்கி வாலிபர் பலி


ஆட்டோவை துரத்தி சென்றபோது விபத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Sept 2021 12:17 AM IST (Updated: 2 Sept 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

படவேட்டில் ஆட்டோவை, மோட்டார்சைக்கிளில் துரத்தி சென்றபோது விபத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

கண்ணமங்கலம்

படவேட்டில் ஆட்டோவை, மோட்டார்சைக்கிளில் துரத்தி சென்றபோது விபத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் எதிரில் ஓட்டல் நடத்தி வருபவர் சிவக்குமார். இவரது மகன் ஓம்பிரகாஷ் (வயது 24). இவர் கடந்த 28-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் புஷ்பகிரி காலனி வழியாக சென்றுள்ளார். 

அப்போது அங்கு பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்து திருவிழா பார்த்துள்ளனர். இதனால் ஓம்பிரகாஷ் ஹாரன் அடித்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த சிலர் ஓம்பிரகாஷை தாக்கி, ஒரு பவுன் சங்கிலியை பறித்தாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தவாசல் போலீசில் ஓம்பிரகாஷ் புகார் செய்தார். 

அதன் பேரில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

வாலிபர் பலி

இந்த நிலையில் புஷ்பகிரி காலனியைச் சுபாஷ் (24) என்பவர் நேற்று முன்தினம் இரவு படவேட்டில் ஆட்டோவில் பயணிகளை இறக்கிவிட வந்துள்ளார். 

அப்போது ஓம்பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் சிவபிரசாத் என்கிற  சூர்யா (21) ஆகியோர் ஆட்டோவை வழிமடக்கி 28-ந் தேதி நடந்த சம்பவம் குறித்து  கேட்டுள்ளனர். இதனால் ஆட்டோ டிரைவர் சுபாஷ் அங்கிருந்து ஆட்டோவில் வேகமாக சென்றுள்ளார்.

அவரை ஓம்பிரகாஷ் மற்றும் சிவபிரசாத் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று ஆட்டோவை முந்த முயன்றுள்ளனர். அப்போது ஆட்டோவில் மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர்.

அவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிவபிரசாத் வழியிலேயே இறந்துவிட்டார். ஓம்பிரகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை 

இந்த சம்பவம் தொடர்பாக சிவபிரசாத்தின் தந்தை ரமேஷ், சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஆரணி துணைபோலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சந்தவாசல் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் எதிரொலியாக ஏ.கே.படவேடு மற்றும் புஷ்பகிரி காலனி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story