திருச்செங்கோட்டில் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை


திருச்செங்கோட்டில் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Sept 2021 12:29 AM IST (Updated: 2 Sept 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் தாய், மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

எலச்சிபாளையம்:
சிறுநீரக பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பவுர் கவுஸ் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. நெசவுத்தொழிலாளி. இவர் தற்போது திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவருடைய மனைவி சுதா (வயது 42). இந்த தம்பதியின் மகன் சுபாஷ் (23). மெக்கானிக்கல் என்ஜினீயரான சுபாஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனிடையே கடந்த வாரம் சிறுநீரக பாதிப்பால் மிகவும் அவதிப்பட்டார். தொடர்ந்து அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார்.
தற்கொலை
தனது ஒரே மகனுக்கு சிறுநீரக பாதிப்பால் அவதியடைவதை பார்த்து சுதா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுதா வீட்டில் இருந்த 5 சேலைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தார். அதனை சுப்பிரமணியின் அக்காள் அன்னகொடியிடம் வழங்கும்படி அவரிடம் கூறினார். இதையடுத்து சுப்பிரமணி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
வீட்டில் சுதாவும், சுபாசும் இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். மாலை 3 மணிக்கு சுப்பிரமணி வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தனது மனைவி மற்றும் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார்.
தொடர்ந்து அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள், தாய், மகன் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
உருக்கமான கடிதம்
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாய், மகன் தற்கொலை செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு சுபாஷ் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்செங்கோட்டில் தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story