நாமக்கல் மாவட்டம் முழுவதும் 367 பள்ளிகள் திறப்பு-மாணவ, மாணவிகள் உற்சாகம்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் 367 பள்ளிகள் திறப்பு-மாணவ, மாணவிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 1 Sep 2021 6:59 PM GMT (Updated: 2021-09-02T00:29:53+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

நாமக்கல்:
பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைனில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்து இருப்பதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 9, 10, 11 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 178 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 120 மெட்ரிக் பள்ளிகள், 47 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 22 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 9-ம் வகுப்பில் 22,422 மாணவர்கள், 10-ம் வகுப்பில் 22,605 மாணவர்கள், பிளஸ்-1 வகுப்பில் 21,657 மாணவர்கள் மற்றும் பிளஸ்-2 வகுப்பில் 22,103 மாணவர்கள் என மொத்தம் 88,787 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் நேற்று 54,261 பேர் மட்டுமே பள்ளிகளுக்கு வந்தனர். இது மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 61 சதவீதம் ஆகும்.
உற்சாகம்
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோட்டை உயர்நிலை பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாய் வகுப்பறையில் அமர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததை கொண்டாடும் விதமாக அவர்களை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஒருங்கிணைந்த கல்வி இணை இயக்குனர் உமா நாமக்கல் கோட்டை நகரவை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார். இதேபோல் முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் பாலசுப்பிரமணியம், ரவி மற்றும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கல்லூரிகள்
கல்லூரிகளை பொறுத்த வரையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இருப்பினும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி திறக்கப்படவில்லை. இந்த கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டது. எனவே முழுமையான சுகாதார பணிகள் முடிக்கப்பட்டு, வருகிற 6-ந் தேதி கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்படும் என பேராசிரியைகள் தெரிவித்தனர்.

Next Story