நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வினர் 522 பேர் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வினர் 522 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல்:
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்தனர்.
இதனை கண்டித்தும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
நாமக்கல் மாவட்டத்திலும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ராசிபுரம், மோகனூர், பரமத்திவேலூர், கந்தம்பாளையம் உள்பட 14 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி கூட்டத்தை கூட்டி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. பொன் சரஸ்வதி உள்பட அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் 522 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story