எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’’ - பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’’ என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பாவூர்சத்திரம்:
‘‘எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’’ என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
ஊழியர் கூட்டம்
தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி ஊழியர் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.ராமராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் கே.ஏ.ராஜேஷ் ராஜா, வி.சுப்பிரமணியன், பி.முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மற்றும் கோட்ட பொறுப்பாளர் அருள்செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அண்ணாமலை
கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது நமது கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. வர இருக்கும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பா.ஜனதா கட்சி வெற்றி பெறுவது நிச்சயம்.
சட்டமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதா உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தனர். தற்போது 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சி சார்பில் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட உள்ளனர். இதற்கு நாம் இன்றிலிருந்து 3 மடங்கு உழைக்க வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலம்
10 வருடமாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. எதுவும் செய்யாமல், மற்ற கட்சிகளை குறைகூறி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது
2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் நாட்டில் அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் நமது பிரதமர் மூலம் சென்றடையும்.
தற்போது தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. எனவே, எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன், விருதுநகர் மாவட்ட பார்வையாளர் அன்புராஜ் மற்றும் பலர் பேசினர்.
முடிவில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவர் மாறவர்மன் நன்றி கூறினார். கூட்டத்தில் தென்காசி மாவட்ட அளவில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பூலித்தேவன் சிலைக்கு மாலை
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் நினைவு மாளிகை உள்ளது. பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது முழு உருவச்சிலைக்கு தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில் மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அண்ணாமலை கூறுகையில், ‘வீரம் விளைந்த இந்த மண்ணில் முதன்முதலாக எங்களது கட்சி நிர்வாகிகளுடன் மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாளில் மரியாதை செலுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய நினைவுகளை நாம் என்றும் மறக்கக் கூடாது’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி மாநில தலைவர் வினோத் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story