நெல்லையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்


நெல்லையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 2 Sept 2021 1:37 AM IST (Updated: 2 Sept 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் நேற்று பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 319 பள்ளிகள் திறக்கப்பட்டன.

உற்சாகம்

பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். சக மாணவ- மாணவிகளை பார்த்து பேசி உற்சாகம் அடைந்தனர். அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 மாணவர் வீதம் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்.
அதிக மாணவர்கள் ஒரு வகுப்பில் இருந்தால் அவர்களை இரண்டாக பிரித்து சுழற்சி முறையில் பாடம் நடத்தப்பட்டது. அரசின் உத்தரவுபடி கொரோனா தடுப்பூசி போட்ட ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

இனிப்பு வழங்கினர்

மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் நுழைந்ததும் ஆசிரியர் குழுவினர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கைகழுவும் சானிடைசர் வழங்கினர். ஒரு சில தனியார் பள்ளிகளில்  ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு அரசு பஸ்களில் கட்டணம் இல்லாமல் சென்றுவர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஏராளமான மாணவ-மாணவிகள் அரசு பஸ்சில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்தனர்.

கல்லூரி மாணவ-மாணவிகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை காண்பித்து வகுப்பறைக்கு சென்றனர். மற்ற மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போட அறிவுரை வழங்கப்பட்டது. பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி மற்றும் டவுன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர். இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு  கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்கள் என 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளது. 50 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story