தலைமறைவான போதைப்பொருள் வியாபாரி ஓராண்டுக்கு பின்பு கைது


தலைமறைவான போதைப்பொருள் வியாபாரி ஓராண்டுக்கு பின்பு கைது
x
தினத்தந்தி 2 Sept 2021 2:08 AM IST (Updated: 2 Sept 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரையுலகினர் சிக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த, போதைப்பொருள் விற்பனையாளரை ஓராண்டுக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு:

ராகிணி, சஞ்சனா

  கன்னட திரையுலகினர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

  மேலும் போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 25 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஓராண்டுக்கு பின்பு கைது

  இந்த வழக்கில் 21-வது குற்றவாளியான மெர்சி என்பவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதோடு, கன்னட திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் அவரை கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கூறப்பட்டது.

  இந்த நிலையில் மெர்சி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் நேற்று காலை மெர்சியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடிகைகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் மெர்சி சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story