நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது - சச்சின் பைலட் பேட்டி


நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது - சச்சின் பைலட் பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2021 2:13 AM IST (Updated: 2 Sept 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறினார்.

பெங்களூரு:

  ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பணி பாதுகாப்பு

  பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குகிறது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 சதவீதம் முதலீடு செய்ய தனியார்களை மத்திய அரசு அனுமதிக்கிறது. ரெயில்வே, விமான நிலையம், குழாய் கியாஸ் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முன்பு காங்கிரஸ் ஆட்சி காலங்களில் உருவாக்கப்பட்டன. அதை தற்போதைய மத்திய பா.ஜனதா தனியார் மயமாக்குகிறது.

  நாட்டின் வருவாயை பெருக்குவதில் மத்திய அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்துவிட்டது. நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

மக்கள் விரோத கொள்கைகள்

  மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு ஆதரவாக இல்லை. தடுப்பூசி வினியோகத்திலும் தவறுகள் நடக்கின்றன. நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் எந்த விவாதமும் நடைபெறாமல் முடிந்தது. கடந்த முறையும் இதே நிலை தான் உள்ளது.

  விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைளை கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. ராஜஸ்தானிலும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். ராஜஸ்தான் மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து முடிவு எடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால் காங்கிரசில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சியில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே சரியான புரிந்துணர்வு உள்ளது.

முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி

  நான் சில பிரச்சினைகளை காங்கிரஸ் மேலிடத்தில் கூறினேன். அது தொடர்பாக என்னுடன் கட்சி மேலிடம் தொடர்பில் உள்ளது. எனக்கு எந்த மாதிரியான பொறுப்பு வழங்கப்படும் என்று என்னால் கூற முடியாது. அதுபற்றி டெல்லியில் உள்ள கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். 2023-ம் ஆண்டு நடைபெறும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று கட்சியும், ஆட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இதன் மூலம் அடுத்த சட்டசபை தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

  காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள மாநிலம் ராஜஸ்தான். சில கருத்துகளை நான் கூறினேன். அதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் குழு ஒன்றை அமைத்துள்ளார். ஆட்சி எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்த கட்சி தொண்டர்களின் கருத்துகளை தான் நான் கூறினேன். அதை நிறைவேற்றும் வகையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

  மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி தலைமையும், ராஜஸ்தான் முதல்-மந்திரியும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அது எப்போது நடைபெறும் என்று எனக்கு தெரியாது. மாநில மேலிட பொறுப்பாளர் அஜய் மக்கான் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  ஜாலியன் வாலாபாக் புதுப்பிக்கப்பட்டது தொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர்சிங் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் கடைசியில் அகில இந்திய காங்கிரஸ் கூறும் கருத்தே இறுதியானது.
  இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

Next Story