என்ஜினீயரிங் மாணவர் மீண்டும் சிறையில் அடைப்பு
என்ஜினீயரிங் மாணவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வயலப்பாடி கீரனூர் நடுத் தெருவை சேர்ந்தவர் ஐஸ் என்கிற மதியழகன். இவரது மகன் கருப்பையா (வயது 23). என்ஜீனியரிங் கல்லூரி மாணவரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி ஒரு வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, அங்கே தனியாக இருந்த 17 வயது சிறுமியை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், கருப்பையாவை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பாக பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்த வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி அப்போதைய நீதிபதி மலர்விழி, கருப்பையாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து கருப்பையாவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
மேல் முறையீடு
இந்தநிலையில் பெரம்பலூர் மகிளா கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கருப்பையா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு கருப்பையாவுக்கு கீழ் நீதிமன்றமான பெரம்பலூர் மகிளா கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து ஜாமீனில் வெளியே இருந்த கருப்பையாவை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று பிடித்து, பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி கிரி முன்னிலையில் ஆஜர்படுத்தி, மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story