ரூ.90 ஆயிரம் இருப்பது தெரியாமல் தலையணையை சாலையில் வீசிய ஆட்டோ டிரைவர்


ரூ.90 ஆயிரம் இருப்பது தெரியாமல் தலையணையை சாலையில் வீசிய ஆட்டோ டிரைவர்
x
தினத்தந்தி 2 Sep 2021 3:57 AM GMT (Updated: 2021-09-02T09:27:37+05:30)

ஆட்டோவில் இருந்த தலையணையில் ரூ.90 ஆயிரம் மறைத்து வைத்து இருப்பது தெரியாமல் பழைய துணிமூட்டை என நினைத்து டிரைவர் சாலையோரம் வீசி சென்றார். அந்த பணத்தை 3 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ரூ.90 ஆயிரம் மாயம்
மணலியை அடுத்த ஆண்டார்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தபீவி (வயது 60). இவர், டெல்லி செல்வதற்காக ஆண்டார்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் சென்டிரல் ரெயில் நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு ரெயிலில் ஏறினார். டெல்லி விரைவு ரெயிலில் ஏறிய அவர், தலையணையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.90 ஆயிரம் தலையணையோடு மாயமானதை கண்டு திடுக்கிட்டார். உடனே ஆண்டார்குப்பத்தில் உள்ள தனது மகன் முகம்மது வாசிம் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆட்டோ டிரைவரிடம் விசாரணை
எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பரமானந்தம் உத்தரவின்படி, குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர் மேற்பார்வையில் போலீசார் விம்கோ நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் சந்தபீவி வந்து சென்ற ஆட்டோவின் நம்பரை வைத்து அதன் டிரைவரான ஆண்டார்குப்பத்தைச் சேர்ந்த முருகன் (66) என்பவரிடம் விசாரித்தனர்.அவர், சந்தபீயை விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு திரும்பி வந்தபோது ஆட்டோவில் பழைய துணி மூட்டை ஒன்று கிடந்தது. யாரோ வைத்துவிட்டு சென்றுவிட்டதாக நினைத்து சாலையோரம் தூக்கி வீசி விட்டதாக கூறினார்.

உரியவரிடம் ஒப்படைப்பு
உடனடியாக அந்த பகுதிக்கு ஆட்டோ டிரைவரை அழைத்துச்சென்ற போலீசார், ஆண்டார்குப்பம் அருகே சாலையோரம் பணத்துடன் அனாதையாக கிடந்த தலையணை மூட்டையை கண்டுபிடித்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது. பழைய துணி மூட்டை என நினைத்து யாரும் அதனை எடுக்காததால் அதில் இருந்த பணம் தப்பியது.

புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் மாயமானதாக கூறப்பட்ட ரூ.90 ஆயிரத்தை கண்டுபிடித்த போலீசார், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதற்காக எண்ணூர் போலீசாரை மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Next Story