பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி உடல் தகனம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் இறுதி அஞ்சலி


பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி உடல் தகனம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் இறுதி அஞ்சலி
x
தினத்தந்தி 2 Sept 2021 8:19 PM IST (Updated: 3 Sept 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


தேனி:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 66). இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் மாரடைப்பு காரணமாக விஜயலட்சுமி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

இதையடுத்து பெருங்குடி ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் பலர் வந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
டி.டி.வி. தினகரன்
விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நேற்று அதிகாலை முதலே அஞ்சலி செலுத்துவதற்காக தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெரியகுளத்துக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் அஞ்சலி

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் துக்கம் தாங்காமல் தேம்பி தேம்பி அழுதார். அவரை பழனிவேல் தியாகராஜன் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, உதயகுமார், கே.பி.முனுசாமி, தம்பித்துரை எம்.பி., பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன், தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார்  ஆகியோர் விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எல்.மூக்கையா, லட்சுமணன், தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம்

பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் விஜயலட்சுமியின் உடல் பெரியகுளம் நகராட்சி மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது ஊர்வலத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினருடன் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றனர்.

மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் விஜயலட்சுமியின் உடல் விறகுகள் அடுக்கி தகனம் செய்யப்பட்டது. அவருடைய மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. கண்ணீர் மல்க தேம்பி அழுதபடி சிதைக்கு தீ மூட்டினார்.
இறுதி ஊர்வலத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், போடி நகர செயலாளர் வி.ஆர்.பழனிராஜ், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா நாகராஜ், கம்பம் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ், சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா நடேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், கம்பம் நகர பொருளாளர் கருணாமூர்த்தி, உத்தமபாளையம் ஒன்றிய முன்னாள் செயலாளர் அப்துல்காதர் ஜெய்லானி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், பெரியகுளம் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் அப்துல்சமது, கீழவடகரை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Next Story