மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது போடியில் பரபரப்பு


மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய  ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது  போடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Sept 2021 8:32 PM IST (Updated: 2 Sept 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

போடியில் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

போடி:
தேனி மாவட்டம் போடி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது வீட்டுக்கு முன்புறம் உள்ள மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடி மின்சார வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார். மேலும் இதற்காக அவர் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.22 ஆயிரம் செலுத்தி இருந்தார். 
இந்தநிலையில் போடி நகர்பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுருளியப்பன் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய ேவண்டும் என்றால் ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என மகேந்திரனிடம் கேட்டார். ஆனால் மகேந்திரன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. 
கைது
இதுகுறித்து மகேந்திரன் தேனியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை போலீசார் மகேந்திரனிடம்  கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை மகேந்திரன் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுருளியப்பனிடம் கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே சாதாரண உடையில் பதுங்கி இருந்த தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சுருளியப்பனை பிடித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மின்வாரிய அலுவலகத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் சோதனை நடந்தது. 
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி மின்வாரிய செயற்பொறியாளர் சுருளியப்பனை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story