உளுந்தூர்பேட்டையில் இருந்து கேரளாவுக்கு கடத்த குடோனில் பதுக்கிய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 5 பேர் கைது
உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை,
ரகசிய தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எதலவாடி கிராம வயலில் உள்ள ஒரு குடோனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு லாரிகளில் கடத்தி செல்வதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் உடனே எதலவாடி கிராமத்தில் உள்ள குடோனுக்குள் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 2 லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உஷாரான போலீசார் அவர்களை சுற்றி வளைத்தபோது, 5 பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ரேஷன் அரிசி கடத்த முயற்சி
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதேஊரை சேர்ந்த குடோன் உரிமையாளர் மாசிலாமணி, லாரி உரிமையாளர் திருக்கோவிலூரை சேர்ந்த சக்தி, மூட்டைகளை லாரியில் ஏற்றிய நத்தாமூரை சேர்ந்த சிவபிரகாஷ், முத்துக்குமார், மொகலார் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோர் என்பதும், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி குடோனில் பதுக்கி வைத்து லாரிகள் மூலம் கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
2 லாரிகள் பறிமுதல்
தொடர்ந்து குடோன் மற்றும் லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த 25 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு விழுப்புரம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவர் என கூறப்படும் திருநாவலூரை சேர்ந்த சுகர்ணா என்பவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story