சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்தது:சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்-நாமக்கல் இல்லத்தரசிகள் கோரிக்கை


சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்தது:சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்-நாமக்கல் இல்லத்தரசிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Sep 2021 6:12 PM GMT (Updated: 2 Sep 2021 6:12 PM GMT)

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்து உள்ள நிலையில், விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாமக்கல்:
சமையல் கியாஸ் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அனுசரித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு இருமுறை சமையல் கியாஸ் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 1-ந் தேதி சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.900-ஐ தாண்டி இருப்பதால் நாமக்கல் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நாமக்கல் வேப்பநத்தம் கலைவாணி:-
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலையை காரணமாக கூறி மாதம் தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை அதிகரித்து கொண்டே போகிறது. கொரோனா ஊரடங்கில் போதிய வருமானம் இல்லாத நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது நியாயம் இல்லை. வீட்டு வாடகை, பள்ளி, கல்லூரி கட்டணங்கள் போன்றவற்றுடன் சமையல் கியாஸ் சிலிண்டரும் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் மாத பட்ஜெட்டும் உயர்ந்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு ரூ.410-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது 7 ஆண்டுகளில் 125 சதவீதம் விலை உயர்ந்து ரூ.900-ஐ தாண்டி உள்ளது. மானியமும் பெயரளவில் தான் உள்ளது. இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருள்
திருச்செங்கோட்டை சேர்ந்த ராணி:-
நடுத்தர வர்க்கம் மற்றும் வசதி படைத்தவர்கள தான் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வந்த காலம் போய் தற்போது அனைத்து தரப்பினருமே பயன்படுத்துகின்றனர். இப்போது தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாக சமையல் கியாஸ் சிலிண்டர் மாறி விட்டது. இதனை பயன்படுத்தி கொண்டு விலையை மாதந்தோறும் உயர்த்துவது அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.285 சமையல் கியாஸ் விலை உயர்ந்து உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் கியாஸ் விற்பனை மூலம் ரூ.23 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளது. விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சமையல் கியாஸ் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும்.
கடும் நெருக்கடி
பரமத்திவேலூரை சேர்ந்த உமா:-
கொரோனா காலத்தில் வேலையில்லாமலும், போதிய வருமானம் இல்லாமலும் இருந்து வரும் எங்களுக்கு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு சமாளிக்கும் வகையில் இல்லை.
சமையல் கியாஸ் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கும் நிலையில், சிலிண்டரை நம்பி வாழும் பொதுமக்களுக்கு பேரிடியாக விலையை உயர்த்தி உள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற்று பொதுமக்களை காக்க முன்வர வேண்டும்.
கண்டிக்கத்தக்கது
பாச்சல் கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்:-
தற்போது பெண்களின் குடும்ப வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு இல்லாமல் தடுமாற்றமான சூழ்நிலையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு சமையல் கியாசின் விலையை உயர்த்தி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கியாஸ் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இயற்கை வளங்களான மரங்களை வெட்டும் நிலை உருவாகும். எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டே போனால் பழைய சூழ்நிலையே ஏற்படும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்ட சமையல் கியாஸ் விலையை உடனே திரும்ப பெற்று, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story