திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க போவதாக வந்த தகவலால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க போவதாக வந்த தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sept 2021 1:25 AM IST (Updated: 3 Sept 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருட்டுபோன கதிர்அடிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்து தரக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க போவதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி, செப்.3-
திருட்டுபோன கதிர்அடிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்து தரக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க போவதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கதிர் அடிக்கும் எந்திரம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் உடும்பியம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36) விவசாயி. இவர் சொந்தமாக கதிர்அடிக்கும் எந்திரம் வைத்து இருந்தார். இந்த எந்திரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை அருகே வளநாடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்தி இருந்தார். இந்த எந்திரம் திருட்டு போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கடந்த 14-ந் தேதி வளநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த எந்திரத்தை திருடிய மர்மநபர் இலுப்பூர், அன்னவாசல் ஆகிய பகுதிகளுக்கு ஓட்டி சென்று, பின்னர் திருச்சி நெ.1 டோல்கேட், லால்குடி பகுதிக்கு ஓட்டி சென்ற காட்சி கேமராக்களில் பதிவாகி இருந்தது. ஆனால் அதன்பிறகு அந்த எந்திரம் எங்கு கொண்டு செல்லப்பட்டது என கண்டறிவதற்கான கண்காணிப்பு கேமரா காட்சிகள் எதுவும் சிக்கவில்லை.
தீக்குளிக்க போவதாக தகவல்
இதற்கிடையே பல நாட்களாகியும் தனது எந்திரத்தை போலீசார் கண்டுபிடித்து தராததை கண்டித்து வெங்கடேசன் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாக தகவல் பரவியது. இதனால் உஷார் அடைந்து அசம்பாவித சம்பவம் நடந்துவிடாமல் இருக்க கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசார் கண்காணிப்பு
கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்களின் பைகளை நன்கு சோதனையிட்டபிறகே அனுமதித்தனர். தயார்நிலையில் 2 குடங்களில் தண்ணீரும் நிரப்பி வைத்து இருந்தனர். ஆனால் தீக்குளிக்க போவதாக தகவல் தெரிவித்த நபர் நேற்று மாலை வரை வரவில்லை. ஆனாலும் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story