உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின
அதிராம்பட்டினத்தில் பெய்த கன மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் பெய்த கன மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உப்பு உற்பத்தி
அதிராம்பபட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பளங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் மார்ச் மாதம் முதல் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அதிராம்பட்டினம் பகுதியில் கெமிக்கல் உப்பு, உணவுக்கு பயன்படுத்தப்படும் உப்பு ஆகிய இரண்டு வகை உப்புகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
உப்பளங்கள் மூழ்கின
இதில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்டு இறுதி வரை உப்பு உற்பத்தி செய்யப்படும். தற்போது உப்பு வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் உப்பளங்கள் மழை தண்ணீரில் மூழ்கின. மேலும் வாரப்பட்டு குவிக்கப்பட்ட உப்புகள் மழையால் கரைந்து மீண்டும் உப்பளங்களுக்குள் சென்றது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
உழைப்பு வீணானது
இதுகுறித்து உப்பளத்தொழிலாளர்கள் கூறுகையில்,
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் எங்கள் நிலைமை ஆகி விட்டது. இத்தனை நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் உழைத்து உப்பு வாரும் தருவாயில் மழை வந்ததால் எங்கள் உழைப்பு வீணானது. கனமழையால் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கின. மீண்டும் உப்பு உற்பத்தியை தொடக்க வேண்டும் என்றால் பெரிய அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story