நிலத்தகராறில் ஆசிரியை வீட்டுக்கு தீ வைப்பு


நிலத்தகராறில் ஆசிரியை வீட்டுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 8:21 PM GMT (Updated: 2021-09-03T01:51:51+05:30)

நிலத்தகராறில் ஆசிரியை வீட்டுக்கு தீ வைப்பு

கெங்கவல்லி, செப்.3-
கெங்கவல்லி அருகே நிலத்தகராறில் ஆசிரியை வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் எரிந்து நாசமானது.
ஆசிரியை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் மணங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63) இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்  சதாசிவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சுப்பிரமணியனின் விவசாய தோட்டத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (50) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது.
நிலத்தகராறு
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இது குறித்து சுப்பிரமணியன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிவகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் 
இதனிடையே நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவக்குமார், சுப்பிரமணியனை பார்த்து நான் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றும், உன்னுடைய விவசாய நிலத்தில் எனக்கும் பங்கு உள்ளது என்றும், உன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள கிணறு எனக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்று கூறியும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உன் வீட்டை தீ வைத்து கொளுத்தாமல் விடமாட்டேன் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து சுப்பிரமணியன் குடும்பத்தினர் உயிருக்கு பயந்து தலைவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுப்பிரமணியனின் வீடு தீப்பிடித்து எரிந்தது. அவரது வீட்டுக்கு யாரோ தீ வைத்ததாக தெரிகிறது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் பார்த்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, தீ வைத்ததற்கான அடையாளங்கள் இருந்தன. மேலும் வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்பட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.  இதுமட்டுமின்றி தீ வைத்ததில் வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் நிலத்தகராறில் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story