குழித்துறையில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


குழித்துறையில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Sep 2021 8:47 PM GMT (Updated: 2021-09-03T02:17:50+05:30)

குழித்துறை தண்டவாளத்தில் உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

குழித்துறை:
குழித்துறை தண்டவாளத்தில் உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மின்கம்பி அறுந்தது
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது. குழித்துறை விரிகோடு ரெயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால் மின்கம்பங்களும் சேதமடைந்தன.
மின்சேவை துண்டிக்கப்பட்டதால் ரெயிலும் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று விட்டது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாகர்ேகாவில், குழித்துறை மற்றும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சேவை துண்டிக்கப்பட்டதால், திருவனந்தபுரம் செல்லும் ரெயில்களும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே மின்கம்பியை பழுது பார்க்கும் ஊழியர்களும் என்ஜின் ரெயில் மூலம் வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணி மாலை வரை நடந்தது. மின்கம்பியை சீரமைக்கும் பணிகள் தாமதமாகும் என நினைத்த அதிகாரிகள், ரெயில்களை இயக்க மாற்று நடவடிக்கையை மேற்கொண்டனர். 
அதாவது, மின்சார ரெயிலை, டீசல் என்ஜினை பொருத்தி இயக்க முடிவு செய்தனர். அதன்படி சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மின்கம்பி அறுந்து விழுந்தது பற்றி ரெயில்வே அதிகாரிகள்  கூறியதாவது:-
சென்னை ரெயில் தாமதம்
ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் குழித்துறை ரெயில்வே கேட் பகுதியில் சென்றபோது திடீரென நின்றது. மேலும் ரெயில் என்ஜினுக்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் சந்தேகமடைந்த ரெயில் ஓட்டுனர் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஆய்வு செய்தபோது, விரிகோடு அருகே ரெயில் இயங்க காரணமாக இருக்கும் உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மின்கம்பியை சீரமைக்கும் பணி மாலை 6 மணி வரை நடந்தது. இந்த சீரமைப்பு பணிகளால் திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்பட்டது. நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படவில்லை. டீசல் என்ஜின் பொருத்தி சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதேபோல் மதுரை- புனலூர் ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலும், இதேபோல் இயக்கப்பட்டது. குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்த மத்திய ரெயில்வே துறை அதிகாரிகள் டெல்லியில் இருந்து வர உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story