ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி மோடியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அருண்சிங்குக்கு, குமாரசாமி பதிலடி


ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி மோடியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அருண்சிங்குக்கு, குமாரசாமி பதிலடி
x
தினத்தந்தி 3 Sept 2021 2:28 AM IST (Updated: 3 Sept 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி பிரதமர் மோடியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அருண்சிங்குக்கு, குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரு:

  ராமநகரில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

பிரதமர் மோடியிடம் கேட்டு...

  ஜனதாதளம் (எஸ்) கட்சி மூழ்கும் படகு என்றும், எங்களது கட்சியை குறைவாக மதிப்பிட்டும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கருத்து தெரிவித்துள்ளார். ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி அருண்சிங் பேசி இருப்பது சரியல்ல. நாட்டை 2-வது முறையாக பா.ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்காக எங்களது கட்சியை தாழ்வாக நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை பற்றி பேசுவதை அருண்சிங் நிறுத்தி கொள்ள வேண்டும்.

  எனக்கு புத்திமதி கூறுவதற்கு முன்பாக, அருண்சிங் தனது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றியும், குமாரசாமி பற்றியும் தெரியவில்லை எனில், பிரதமர் மோடியிடம் கேட்டு அருண்சிங் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

பா.ஜனதா கொடுத்த பரிசு

  மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான்இருக்கிறது. பா.ஜனதா பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் ஏழை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள சாதாரண கூலித் தொழிலாளி கூட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரி கட்ட வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு உள்ளனர். பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்து இருப்பதால், மக்களுக்கு பா.ஜனதா அரசு கொடுத்திருக்கும் பரிசு இதுவாகும்.

  மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு எந்த நிவாரண உதவியும் கிடைப்பதில்லை. கர்நாடகத்தை மத்திய அரசு மறந்து விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு இருப்பதால், ஏராளமான சலுகை கிடைக்கும் என்று நினைத்து மக்கள் தான் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பணியில் மட்டும் அருண்சிங் ஈடுபடக்கூடாது. மேலிட பொறுப்பாளராக இருந்து கொண்டு, மத்திய அரசால் கர்நாடகத்திற்கு ஏற்படும் அநீதியையும் அருண்சிங் சரி செய்ய வேண்டும்.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story