அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா


அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Sept 2021 2:30 AM IST (Updated: 3 Sept 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடலூர், 

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதேபோல் கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்திற்கும் மாணவிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு முக கவசம் வழங்கியும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.

கொரோனா உறுதி

அதன்பிறகு வகுப்பறைகளில் மாணவிகள் அமர வைக்கப்பட்டு, ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர். அப்போது ஓய்வறையில் அமர்ந்து இருந்த இடை நிலை ஆசிரியை ஒருவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதனால் அவரை சக ஆசிரியர்கள் தனியாக அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர். இதற்கிடையில் அவர் ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனை எடுத்து இருந்தார். அவருக்கு காலை 11 மணி அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி, ஒருவர் பேசி தகவல் தெரிவித்தார். அவரது மகளுக்கும் பாதிப்பு உறுதியாகி இருந்தது.
இதை அறிந்ததும் சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியரை பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த தகவல் நேற்று தான் வெளியானது. இதனிடையே அந்த ஆசிரியை இருந்த அறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பற்றி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அவர் உடல் நிலை சரியில்லாமல் தனிமையில் தான் அந்த ஆசிரியர் இருந்தார். அவர் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மட்டுமே பாடம் எடுப்பார். இடைநிலை ஆசிரியையான அவர் மாணவிகளுக்கு பாடம் எடுக்கவில்லை என்றார்.

Next Story