கொரோனா நோயாளி தப்பி ஓடியதால் பரபரப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Sep 2021 9:02 PM GMT (Updated: 2 Sep 2021 9:28 PM GMT)

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில், கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த முதியவர் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்,

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில், கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த முதியவர் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களை மாவட்டத்தின் எல்லையில் போலீசார் மற்றும் சுகாதார துறையினர் தீவிர பரிசோதனை செய்தே மாவட்டத்திற்குள் அனுமதிக்கிறார்கள். 

அவர்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கும் பட்சத்தில், சம்பந்தபட்ட நபரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கிறார்கள். 

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அனந்தன்நகரில் சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனை நடத்தினர். அப்போது 87 வயது முதியவர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஆகும். முதியவர் கொரோனா பாதிப்புடன் நாகர்கோவிலில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. உடனே சுகாதார பணியாளர்கள், அந்த முதியவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திாியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொரோனா வார்டில் மருந்துகள் வழங்க சென்றபோது, முதியவரை காணவில்லை. அவர் வார்டில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்து ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் மாயமான முதியவரை தேடி வருகின்றனர். கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த முதியவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story