100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்


100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 Sept 2021 2:47 AM IST (Updated: 3 Sept 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழித்திடும் வகையில் அரசு பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முக்கிய செயலாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது வரை 40.6 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திட அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

விளம்பரம்

வருவாய்த்துறையின் மூலம் தாசில்தார்கள் கொரோனா தடுப்பூசி நடைபெறும் இடங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கிராம உதவியாளர்கள் தண்டோரா மூலம் தடுப்பூசி செலுத்த உள்ளதை விளம்பரம் செய்யவும், தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம் நமது மாவட்டத்தில் 100 சதவீதம் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார், நலப்பணிகள் இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story