புதுவை மாநிலத்தில் 40 கிராமங்களில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி


புதுவை மாநிலத்தில் 40 கிராமங்களில் 100 சதவீதம்  கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 Sep 2021 2:16 PM GMT (Updated: 3 Sep 2021 2:16 PM GMT)

புதுவை மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வில்லியனூர், செப்.
புதுவை மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தடுப்பூசி முகாம்
புதுவை மாநிலத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார். ஆனால் இலக்கை எட்ட முடியவில்லை.
இந்த நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதுவாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று காலை முதல் 48 மணிநேர தொடர் தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
இதன் தொடக்க நிகழ்ச்சி வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது கவர்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று தற்போது சிறிது உயர்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை எச்சரிக்கையாக கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
100 சதவீதமாக...
வேலைக்கு செல்பவர்களும் பணிச்சுமை காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் வசதியாக 48 மணி நேரம் தொடர் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தி 90 சதவீத தடுப்பூசி போட்ட மாநிலமான புதுச்சேரியை 100 சதவீதமாக மாற்ற பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். 
புதிய கட்டிடம்
அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி புதிய கட்டிடத்தில் மருத்துவமனையை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவ அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலக்கூடம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் 48 மணி நேர கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது.
காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், டாக்டர் ராஜு மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
____

Next Story