கொடைக்கானலில் தொடர் மழையால் விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் தொடர் மழையால் விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 3 Sep 2021 3:44 PM GMT (Updated: 3 Sep 2021 3:44 PM GMT)

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர். 
விடிய, விடிய மழை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரில் கனமழை கொட்டித்தீர்த்தது. மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை, மாலை 6 மணி வரை இடைவிடாமல் பெய்தது. அதன்பிறகு சாரல் மழை விடிய, விடிய பெய்தது. நேற்றும் நகரின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் கொடைக்கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளும் சிரமம் அடைந்தனர். அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர். 
கனமழையால் நகரில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானலில் உள்ள தேவதை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதுதவிர அவ்வப்போது மேக கூட்டங்கள் தரை இறங்கி, நகரை குளிர்வித்தது. அந்த குளிர்ச்சியான சூழலையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். மேலும் மேக கூட்டங்களால் பகல் நேரத்திலேயே நகர் இருளில் மூழ்கியது போன்று தோன்றியது. அப்போது சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. 
சுற்றுச்சுவர் சேதம்
கொடைக்கானலில் மழையுடன் வீசிய காற்றால் பழனி மலைப்பாதையில் பச்சை பங்களா என்ற இடத்தில் சாலையோர மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த சாலையில் யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்தனர். 
இதேபோல் வில்பட்டி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் சேதமடைந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலையில் விழுந்த கற்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 
பெரும்பாறை
பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது பெரும்பாறை-சித்தரேவு இடையேயான மலைப்பாதையில் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மழையுடன் வீசிய பலத்த காற்றால் பெரிய, பெரிய மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் தாண்டிக்குடி-பட்டலங்காடு இடையேயான மலைப்பாதையிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஆனால் அவற்றை அப்புறப்படுத்தவில்லை. இதனால் அந்த வழியாக சென்றவர்கள், மரக்கிளைகளை தாங்களாகவே சாலையோரமாக அப்புறப்படுத்திவிட்டு சென்றனர்.  இதற்கிடையே நேற்று பெரும்பாறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்தது. 

Next Story