தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு மர்ம பெண் கைவரிசை
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு மர்ம பெண் கைவரிசை
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 10 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
தூத்துக்குடி, அசோக்நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 61). கூலித் தொழிலாளி. தங்கராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்புலட்சுமிக்கு கணேசபெருமாள் என்ற மகனும், மகேசுவரி என்ற மகளும் உள்ளனர். கணேசபெருமாள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். மகள் மகேசுவேரி, தாய் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் மாலை 5 மணி அளவில் சுப்புலட்சுமி வீட்டில் இருந்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்து உள்ளார். அவர் தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து வருவதாக கூறி உள்ளார். உங்களது தொழிலாளர் நல வாரிய அட்டையை எடுத்து வாருங்கள்; உங்களுக்கு ஓய்வூதியத்துக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம்.
10 பவுன் திருட்டு
இதனை நம்பிய சுப்புலட்சுமி வீட்டுக்குள் நலவாரிய அட்டையை எடுப்பதற்காக சென்று உள்ளார். அவர் பின்னாலேயே வந்த அந்த பெண் வீட்டின் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து உள்ளார். அப்போது நைசாக சுப்புலட்சுமியின் மீது மயக்க மருந்தை தெளித்ததாக கூறப்படுகிறது. அதனை அறியாத சுப்புலட்சுமி, அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்தாராம். சிறிது நேரத்தில் சுப்புலட்சுமிக்கு மயக்கம் வந்ததால் கீழே படுத்து விட்டாராம். மயக்கம் தெளிந்து எழுந்த போது, அந்த பெண்ணை காணவில்லை. தான் அணிந்து இருந்த தங்கசங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் தங்கநகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் என்று கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து மர்ம பெண்ணை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story