ரூ.1½ லட்சம் வலையை அறுத்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுத்துச்சென்றனர். தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
வேதாரண்யம்:
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுத்துச்சென்றனர். தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
ஆறுகாட்டுத்துறை மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது62), அதே பகுதியை சேர்ந்த கோபால்(50), மணிகண்டன்(40), தியாகராஜன்(65) ஆகிய 4 மீனவர்களும், நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் இரவு 7 மணி அளவில் ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே 19 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட படகு செல்வது போன்று சத்தம் கேட்டுள்ளது.
வலையை அறுத்து சென்ற கடற்கொள்ளையர்கள்
இதனால் ஆறுக்காட்டுதுறை மீனவர்கள் தங்களது வலையை எடுத்து பார்த்தபோது சுமார் 350 கிலோ எடையுள்ள வலை அறுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
நேற்று மதியம் கரைக்கு திரும்பிய ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கிராம பஞ்சாயத்தாரிடம், இலங்கை கடற்கொள்ளையர்கள் தங்களது வலையை அறுத்து சென்றதாக தெரிவித்தனர்.
தொடரும் அட்டூழியம்
இதேபோல கடந்த 1-ந் தேதி ஆறுக்காட்டுத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறுக்காட்டுத்துறை மீனவர்களிடம் மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்து செல்வது அந்தபகுதி மீனவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story