மயிலத்தில் தனியார் விடுதியில் தம்பதியிடம் 18 பவுன் நகை திருட்டு 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


மயிலத்தில் தனியார் விடுதியில் தம்பதியிடம் 18 பவுன் நகை திருட்டு 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Sept 2021 10:29 PM IST (Updated: 3 Sept 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

மயிலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியிடம் 18 பவுன் நகையை திருடிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலம்,

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 56). இவரது மனைவி மஞ்சுளா (50). இவர்கள் உறவினர் ஒருவரின் திருமண விழா விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

 விழாவில் பங்கேற்க வீரராகவன் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் கூட்டேரிப்பட்டுக்கு வந்துவிட்டார். அவர்கள், திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறையெடுத்து தங்கினர்.

நகை திருட்டு

இந்நிலையில், மஞ்சுளா அணிந்திருந்த 18 பவுன் தங்க நகைகளை கழற்றி, அறையில் இருந்த ஒரு மேஜை மீது வைத்துவிட்டு, இரவில் தூங்கினார். அப்போது அவர்களது அறையின் கதவை பூட்டாமல் இருந்துள்ளனர்.  

நேற்று காலை மஞ்சுளா எழுந்து பார்த்த போது, அங்கிருந்த தங்க நகைகளை காணவில்லை. இரவில் அறைக்குள் நுழைந்த மர்ம மனிதர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.


கண்காணிப்பு கேமரா

இதுபற்றி வீரராகவன் மயிலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், மயிலம் இன்ஸ்பெக்டர் கணகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

 அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி, அதில் இருந்த காட்சியை பார்த்தனர். அப்போது, அதிகாலை 4.15 மணியளவில் பக்கத்து அறையில் இருந்த நபர் ஒருவர் உள்ளே சென்று வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த நபரையும், அவருடன் தங்கி இருந்த நண்பரையும்  போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story