ஆசிரியைகளுக்கு கொரோனா: அரசு, தனியார் பள்ளிகளில் மருத்துவக்குழுவினர் ஆய்வு


ஆசிரியைகளுக்கு கொரோனா: அரசு, தனியார் பள்ளிகளில் மருத்துவக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Sept 2021 10:46 PM IST (Updated: 3 Sept 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர், 

பள்ளிகள் திறப்பு

தமிழக அரசு உத்தரவுபடி கடந்த 1-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்ப நிலை அறியப்பட்டது. சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கடலூர் வேணுகோபாலபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாணவிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா

அப்போது உடல் நிலை சரியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்த இடைநிலை ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சக ஆசிரியர்கள், மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று நெய்வேலியிலும் தனியார் பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அரசு, தனியார் பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்த முடிவு செய்தனர். அதன்படி பள்ளிக்கு தலா ஒரு டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் சென்று பள்ளிகளில் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறார்களா?, அவர்களின் சான்றிதழ்,  உடல் வெப்ப நிலை சோதனை செய்யப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வு

அதன்படி நேற்று கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் ராஜகணபதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியை இருந்த அறையில் கிருமி நாசினி தெளித்து, அந்த அறையை பூட்டினர். மேலும் அந்த ஆசிரியை மாணவிகளுக்கு பாடம் எடுக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளியில் ஆசிரியர்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாணவிகளுக்கும் இது பற்றி எடுத்துக்கூற வேண்டும் என்று அறிவுரை வழங்கி சென்றனர்.

விழிப்புணர்வு

இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு, தனியார் பள்ளிகளிலும் தலா ஒரு டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் அடங்கிய மருத்துவக்குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அவர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story