முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு
5 மாதங்களுக்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. அங்கு வாகன சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
கூடலூர்,
5 மாதங்களுக்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. அங்கு வாகன சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
ஊரடங்கில் தளர்வு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அரிய வகை தாவரங்களும், மரங்களும் உள்ளன. இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
வாகன சவாரி தொடக்கம்
அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகம் நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி அங்கு காலை 7 மணிக்கு வாகன சவாரி தொடங்கப்பட்டது. முன்னதாக தெப்பக்காட்டில் உள்ள வரவேற்பு மையத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளை வனச்சரகர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர் வரவேற்றனர்.
தொடர்ந்து தெர்மல் ஸ்கேனர் மூலம் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டது. பின்னர் வனத்துறை வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட்டனர். அங்கு காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மிகுந்த மகிழ்ச்சி
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கி மன சோர்வு ஏற்பட்டு இருந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் குடும்பத்தினருடன் நீலகிரிக்கு சுற்றுலா வந்தோம்.
ஊட்டியில் தங்கியிருந்தபோது முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு குறித்த தகவல் கிடைத்தது. இதனால் ஆர்வமுடன் முதுமலைக்கு வந்து வாகன சவாரி செய்து, இயற்கை அழகை ரசித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குளு குளு காலநிலையை அனுபவித்ததோடு வனவிலங்குகளை கண்டு ரசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
அறிவுரை
முதுமலையில் வாகன சவாரிக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வனத்துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story