தூய்மை பாரதம் திட்ட பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
தொடர்ந்து பணி வழங்கக்கோரி தூய்மை பாரதம் திட்ட பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர்,
தூய்மை பாரதம் திட்டம்
கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி, தூய்மை பாரதம் திட்ட பணியாளர்கள் (ஊக்குனர்கள்) சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரதம் திட்டத்தில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி முதல் 22 பேர் ஊக்குனர்களாக பணியமர்த்தப்பட்டு தற்போது வரை எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி பணியினை செய்து வந்துள்ளோம்.
கடந்த 2020-ம் ஆண்டு வேறொரு தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் வந்தபோதும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளோம்.
ஊதியம் வழங்க கோரிக்கை
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் மீண்டும் வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்ததாரராக வந்தவுடன் எங்கள் 22 பேரில் 17 பேருக்கு பணி வழங்க மறுத்து விட்டனர். கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஊதியத்தையும் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர். நாங்கள் செய்து வந்த பணி தாற்காலிக பணியல்ல. அப்பணி தொடர்ந்து செயல்படுத்தக்கூடிய பணியே ஆகும். அவ்வாறு செயல்படுத்தப்படும் பணியில் எங்களையே தொடர்ந்து செயல்பட செய்வதால், பேரூராட்சி நிர்வாகங்களுக்கோ அல்லது ஒப்பந்ததாரருக்கோ எவ்வித இழப்பும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, தொடர்ந்து எங்களுக்கு பணி வழங்கி வாழ்வாதாரம் பாதுகாக்கவும், கடந்த 3 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ள ஊதியம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story