வெங்காய வியாபாரி காரில் கடத்தல்
வெங்காய வியாபாரி காரில் கடத்தல்
மேச்சேரி, செப்.4-
ஜலகண்டாபுரம் அருகே வெங்காய வியாபாரி காரில் கடத்தியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெங்காய வியாபாரி
ஜலகண்டாபுரம் அருகே எலவம்பட்டி நத்தக்காட்டானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38), வெங்காய வியாபாரியான இவருக்கு சொந்தமான குடோன் ஜலகண்டாபுரம் சின்னம்பட்டி சாலையில் உள்ளது. கடந்த 1-ந் தேதி (புதன்கிழமை) காலையில் செல்வராஜ், குடோனில் இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது. அந்த கும்பல் செல்வராஜை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் செல்வராஜ் மனைவி சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களது கணவர் ெவங்காயம் வாங்கியது மற்றும் கொடுக்கல், வாங்கல் வகையில் ரூ.21 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் அதற்கு நிகராக சொத்தை கிரையம் செய்து தர வேண்டும். அப்படி செய்தால்தான் அவரை விடுவிப்போம் என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.
வியாபாரி மீட்பு
இதுகுறித்து செல்வராஜின் மனைவி சரண்யா ஜலகண்டபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வெங்காய வியாபாரியை கடத்திய கும்பலை தேடி வந்தனர். இதற்கிடையே கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஒரு நார் மில்லில் செல்வராஜை அவர்கள் அடைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று செல்வராஜை மீட்டு, அவரை கடத்திய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
4 பேர் கைது
விசாரணையில், அவர்கள் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30), ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (26), கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த குல்முகமது (25), கிஷோர் (19) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். வெங்காய வியாபாரி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story