ஐ.டி. ஊழியர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற 2 பேர் கைது


ஐ.டி. ஊழியர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2021 8:33 PM GMT (Updated: 3 Sep 2021 8:33 PM GMT)

பெங்களூருவில் ஐ.டி.நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போதைப்பொருட்கள் விற்றதாக, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

போலீசார் சோதனை

  பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

  இந்த சோதனையின் போது அந்த வீட்டில் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தி கொண்டு இருந்த போது அந்த வீட்டில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேரும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பிட்காயின் மூலம் பணம்

  அதாவது டெல்லியை சேர்ந்த ஒருவர் டார்க்நெட் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் இருந்து எம்.டி.எம்.ஏ., ஆசிஷ் ஆயில், ஹைட்ரோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். போதைப்பொருட்கள் வாங்கியதற்கான பணத்தை அந்த டெல்லி நபர் பிட்காயின் மூலம் செலுத்தி வந்து உள்ளார். தான் வாங்கிய போதைப்பொருட்களை பெங்களூருவில் உள்ள ஐ.டி.நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விற்பனை செய்ய டெல்லி நபர் முடிவு செய்து உள்ளார்.

  ஆனால் அவரால் பெங்களூருவில் தங்கி இருந்து போதைப்பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை உண்டானது. இதனால் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போதைப்பொருட்களை விற்பனை செய்ய வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு மாத சம்பளம், வீட்டு வாடகை ஆகியவற்றை கொடுத்து வந்ததும் தெரியவந்து உள்ளது.

ரூ.2 கோடி போதைப்பொருட்கள்

  கைதானவர்களிடம் இருந்து 150 எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள், 3,520 கிராம் ஹசிஷ் ஆயில், 180 எல்.எஸ்.டி. ஸ்ட்ரிப், 50 கிராம் உலர்ந்த கஞ்சா, 30 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், 2 எடை போடும் எந்திரங்கள் என ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

கைதான 2 பேர் மீதும் ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் டெல்லியை சேர்ந்த நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Next Story