ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்கள்


ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்கள்
x
தினத்தந்தி 3 Sep 2021 9:01 PM GMT (Updated: 2021-09-04T02:31:19+05:30)

ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெங்களூரு:

மங்களூரு சர்வதேச விமான நிலையம்

  இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலங்களிடையே உள்நாட்டு விமான போக்குவரத்தில் அதிக விமானங்கள் மற்றும் பயணிகளை கையாண்டதில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பஜ்பேவில் உள்ள மங்களூரு சர்வதேச விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

   கடந்த ஜூலை மாதம் 18 ஆயிரத்து 557 பயணிகள் மங்களூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். ஆனால் ஆகஸ்டு மாதம் 26 ஆயிரத்து 67 பயணிகள் மங்களூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு விமானம் மூலம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 10-ந் தேதி முதல்...

   அதேபோல் கடந்த ஜூலை மாதத்தைவிட ஆகஸ்டு மாதத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து மங்களூருவுக்கு வந்த பயணிகள் எண்ணிக்கையும் 35 சதவீதத்தில் இருந்து 40.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ஆரோக்கியமான உயர்வு. இனிவரும் மாதங்களில் பண்டிகைகள், விழாக்கள் அதிக அளவில் வருவதால் விமான போக்குவரத்து வருகிற 10-ந் தேதி முதல் அதிகரிக்கப்படும்.

துபாய், அபுதாபி பகுதிகளுக்கு...

  ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூருவில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் மும்பைக்கு கூடுதல் விமானங்களை தினசரி அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் மங்களூருவில் இருந்து துபாய், அபுதாபி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமானங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் இண்டிகோ நிறுவனமும் மங்களூருவில் இருந்து ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட இடங்களுக்கு விமான போக்குவரத்தை தொடங்கிவிட்டது.

  மேலும் இண்டிகோ நிறுவனம் மங்களூருவில் இருந்து ஐதராபாத் உள்ளிட்ட பிரபல நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்கி வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் மங்களூருவில் இருந்து வழக்கம்போல் அனைத்து ஊர்களுக்கும் விமானங்கள் இயக்கப்படும். மேலும் விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story