பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
பழைய ஓய்வூதிய திட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படியை ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் காலிப்பணியிடங்களில் கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். தனியார் நிதி உதவிபெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். இடைநிலை ஆசிரியருக்கான ஊதிய குறைபாட்டை சரிசெய்து முழு ஊதியம் வழங்கிட வேண்டும்.
ஊக்க ஊதிய உயர்வு
உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கக்கூடிய விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட பொருட்களை அனைத்து பள்ளிகளுக்கும் அரசு செலவில் நேரடியாக சென்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரித்து செயல்படுத்த நகர பஞ்சாயத்து நிர்வாகத்தின் சுகாதார பணியாளர்களை பயன்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் பிரிவு மாநில பொது செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநில பொருளாளர் வில்சன் பர்ணபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மாரி கணேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story