தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்


தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Sep 2021 2:34 PM GMT (Updated: 4 Sep 2021 2:34 PM GMT)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி முகாம்

கோவில்பட்டி அருகே உள்ள செமபுதூர் கிராமத்தில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். 

பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் 3-வது அலையில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், பாதிப்பு குறைவாக இருப்பதோடு, உயிரிழப்பையும் தவிர்க்கலாம்.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி முகாம்களை நடத்துவதோடு, பல்வேறு இடங்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.

12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் சராசரியாக சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று மட்டும் 11 ஆயிரத்து 335 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 50 ஆயிரம் டோஸ் தடுப்பூசி தொடர்ந்து கையிருப்பில் உள்ளது. சுகாதார துறையின் மூலம் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. 

ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி டோஸ் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசி போடுவது தான் இலக்கு. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் கீழ்ஈரால் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் உமா செல்வி, டாக்டர் விக்னேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர், காப்பகத்தில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சிவசங்கரன், எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story