மண்எண்ணெய் ஊற்றி தீ வைப்பு சிகிச்சை பலனின்றி பெண் சாவு


மண்எண்ணெய் ஊற்றி தீ வைப்பு சிகிச்சை பலனின்றி பெண் சாவு
x
தினத்தந்தி 5 Sept 2021 12:22 AM IST (Updated: 5 Sept 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அன்னவாசல்
தீ வைத்த மகன்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலையை சேர்ந்தவர் லீலாவதி (வயது 55). இவரது மகன் சந்தோஷ்குமார் (26) கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கியதால் காயம் அடைந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். 
இந்தநிலையில், தனது மோட்டார் சைக்கிளை சந்தோஷ்குமார் அடகு வைத்திருந்தார். அதனை திருப்புவதற்காக தாய் லீலாவதியிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு லீலாவதி தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் தாய் என்றும் பாராமல் லீலாவதி மீது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து ஊற்றி தீவைத்தார்.
தாய் சாவு 
அப்போது வலி தாங்க முடியாமல் லீலாவதி கதறி துடித்தார். உடனே தாயின் மீது பற்றி எரிந்த தீயை சந்தோஷ்குமார் அணைக்க முயன்ற போது அவர் மீதும் தீ பற்றியது. பின்னர் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தாய்-மகன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவர்களை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு லீலாவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அன்னவாசல் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story