தபால்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 13¼ பவுன் நகைகள் கொள்ளை


தபால்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 13¼ பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 4 Sep 2021 7:42 PM GMT (Updated: 2021-09-05T01:12:35+05:30)

கரூர் அருகே தபால்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 13¼ பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர்,
தபால்காரர்
கரூர் அருகே உள்ள நரிகட்டியூர் எழில் நகரை சேர்ந்தவர் மோதிலால் நேரு (வயது 48). இவர் கரூரில் தபால்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இவரது மனைவி மளிகை பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார்.
இந்தநிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த மோதிலால் நேரு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டினுள் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.
13¼ பவுன் நகைகள் கொள்ளை
அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 13¼ பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு மோதிலால் நேரு புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தபால்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 13¼ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story