கடைகளில் பூட்டை உடைத்து செல்போன், பணம் திருடிய 3 பேர் கைது


கடைகளில் பூட்டை உடைத்து செல்போன், பணம் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2021 2:26 AM IST (Updated: 5 Sept 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் கடைகளில் பூட்டை உடைத்து செல்போன்கள், பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி:
புளியங்குடியில் கடைகளில் பூட்டை உடைத்து செல்போன்கள், பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடைகளில் செல்போன் திருட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகில் முத்துசாமி என்பவரது கடையில் கடந்த 1-ந்தேதி இரவில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பலான 30 செல்போன்கள், உதிரிபாகங்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
மேலும் புளியங்குடி மெயின் ரோடு பழைய மார்க்கெட்டில் முகம்மது என்பவரது கடையிலும் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.3 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மற்றொரு செல்போன் கடையிலும் கொள்ளை முயற்சி நடந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த துரை பாண்டி மகன் கார்த்திக் பாண்டி (20), கண்ணன் மகன் சுகுமாறன் (26), மதுரை அரசரடியைச் சேர்ந்த சரவணன் மகன் சிவசங்கர் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து புளியங்குடியில் கடைகளில் செல்போன், பணம் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

கைதான 3 பேரும் கடந்த 1-ந்தேதி இரவில் மதுரையில் இருந்து நெல்லைக்கு மினி லாரியில் சிப்ஸ் லோடு ஏற்றி வந்ததும், பின்னர் நள்ளிரவில் திரும்பி செல்லும் வழியில் புளியங்குடியில் கடைகளில் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருடியதும் தெரிய வந்தது.
கடைகளில் திருடிய செல்போன்கள், பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர் கார்த்திக் பாண்டி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story