ஜவுளிக்கடையில் பணம் திருடியவர் கைது
ஜவுளிக்கடையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
ஜவுளிக்கடையில் திருட்டு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 55). இவர் அப்பகுதியில் நடத்தி வரும் ஜவுளிக்கடையை, கடந்த மாதம் 17-ந் தேதி இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க அவருடைய மகன் மணிகண்டன் வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 ஆயிரம், அதன் அருகில் இருந்த 2 அடி உயர வெள்ளி முலாம் பூசப்பட்ட 2 குத்து விளக்குகள் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ஒரு அடி உயர பிள்ளையார் சிலை ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் ஜவுளிக்கடை அருகே உத்திராபதி என்பவர் நடத்தி வரும், இரவு நேர ஓட்டலில் கல்லாவில் இருந்த ரூ.500-ஐயும், அங்கு வைக்கப்பட்டிருந்த பொட்டுக்கடலையையும் மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
கைது
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை, மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு சாலையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் உள்ள கொம்பேதி தெருவை சேர்ந்த ஏசுராஜ்(53) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீன்சுருட்டியில் ஜவுளிக்கடை, ஓட்டல் மற்றும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதியில் பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் கோபி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story