கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்குவது குறித்து பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று ஆலோசனை


கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்குவது குறித்து பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 4 Sep 2021 9:34 PM GMT (Updated: 4 Sep 2021 9:34 PM GMT)

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்குவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தி

  நாடு முழுவதும் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி வழங்கவில்லை.

  ஆனால் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் மந்திரி ஈசுவரப்பா மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இன்று ஆலோசனை

  இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மீண்டும் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

  இந்த நிலையில், கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது, ஊர்வலமாக சிலையை எடுத்து சென்று கரைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்குவதா?, வேண்டாமா? என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி

  மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களே அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அதாவது கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் அரசு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story