வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரம்


வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 5 Sept 2021 3:07 AM IST (Updated: 5 Sept 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்ட வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்ட வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறைந்த மக்கள் தொகை

நீலகிரி மாவட்டம் குறைந்த மக்கள் தொகை கொண்டது என்பதால், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் கட்டமாக பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊட்டி நகராட்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டறிந்து செலுத்தப்படுகிறது. வெளியூர் யாரேனும் சென்று உள்ளார்களா, வேலைக்கு சென்று வருகிறார்களா, தடுப்பூசி செலுத்த அச்சம் உள்ளதா என கேட்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். 

95 சதவீதம் பேருக்கு...

ஊட்டி நகராட்சியில் கணக்கெடுப்பு மூலம் தினமும் 250 பேர் முதல் 300 பேர் வரை தடுப்பூசி போடப்படுகிறது. 95 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் 18 வயதுக்கு மேல் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதன் இலக்கை எட்டும் வகையில் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 97 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தொற்று உறுதியாகி இருந்தால் பூரண குணம் அடைந்து 3 மாதத்திற்கு பின்னர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

பரிசோதனை

100 சதவீத இலக்கை அடைய அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர முகாம்கள் மற்றும் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கணக்கெடுப்பின் போது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகிறவர்கள், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி இதுவரை செலுத்தி கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story