5 கிலோ மீட்டர் தூரம் மாணவர்களுடன் ஓடிய கலெக்டர்


5 கிலோ மீட்டர் தூரம் மாணவர்களுடன்  ஓடிய கலெக்டர்
x
தினத்தந்தி 5 Sept 2021 3:17 AM IST (Updated: 5 Sept 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

ஆரோக்கியத்தை வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுடன் கலெக்டர் அரவிந்த் இணைந்து 5 கி.மீ. தூரம் ஓடினார்.

நாகர்கோவில்:
ஆரோக்கியத்தை வலியுறுத்தி நாகர்கோவிலில் நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுடன் கலெக்டர் அரவிந்த் இணைந்து 5 கி.மீ. தூரம் ஓடினார்.

ஆரோக்கிய இந்தியா

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து ஆரோக்கிய இந்தியா சுதந்திர தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டத்தை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவரும் பங்கேற்று ஓடினார். அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இருந்து தொடங்கிய ஓட்டமானது வேப்பமூடு, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக சாலை, பேலஸ் ரோடு வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் முடிவடைந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில், " இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள மக்கள் மன அழுத்தம், சோம்பல், உடல் பருமன் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து  விடுதலை பெறும் நோக்கில் இந்த ஓட்டம் நடத்தப்பட்டது. கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தொடர் ஓட்டம் அமைந்துள்ளது’’ என்றார்.

Next Story