பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்துவது தொடர்பாக தனி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி


பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்துவது தொடர்பாக தனி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் - பசவராஜ் பொம்மை பேட்டி
x

மாநிலத்தில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு என்று தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

மந்திரிகள் கூட்டத்தில் மக்கள்

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சமீபத்தில் மத்திய மந்திரிகளான ஷோபா, பகவந்த கூபா, நாராயணசாமி, ராஜுவ் சந்திரசேகர் தலைமையில் நடந்த மக்கள் ஆசீர்வாத நிகழ்ச்சிகளில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டு, கொரோனா விதிமுறைகளை மீறி இருந்தனர்.

  இதுகுறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

தனியாக வழிகாட்டு நெறிமுறைகள்

  மத்திய மந்திரி பகவந்த கூபா உள்ளிட்ட பிற மத்திய மந்திரிகள் கலந்து கொண்ட மக்கள் ஆசீர்வாத நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்திருந்தது பற்றி எனது கவனத்திற்கும் வந்திருந்தது. இனிவரும் நாட்களில் இதுபோன்று மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கடிவாளம் போடுவதற்கும் அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

  கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள, தங்களுக்குள்ளேயே கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள வேண்டும். அரசே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று இருக்க கூடாது. அரசின் மீதே அனைத்து பொறுப்புகளையும் திணிக்க கூடாது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் போராட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், அதில், எத்தனை பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்காக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பில் வெளியிடப்படும்.

படிப்படியாக பள்ளிகள் திறப்பு

  1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தற்சமயம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும். ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முன்வரும் நாட்களில் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பள்ளிகளை படிப்படியாக திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வருகின்றன.

  இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை மந்திரிகள், அதிகாரிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப்படாது. மாணவ, மாணவிகளின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் அவர்களது உயிர் மீதும் அரசுக்கு அக்கறை உள்ளது.

சாம்ராஜ்நகருக்கு செல்லவில்லை

  சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நான் செல்லவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சந்தர்ப்பத்தில் திறப்பு விழா நடைபெறும் என்பதால், என்னால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்காக ஆஸ்பத்திரியை திறப்பு விழாவுக்கு காத்திருக்க வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகள் மூலமாக ஆஸ்பத்திரியை திறக்கும்படி கூறியுள்ளேன்.

  மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழுவினர் கர்நாடகம் வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான தகவல்களை மந்திரிகள், அதிகாரிகள் வழங்குவார்கள். இந்த ஆய்வு முடிந்த பின்பு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து கர்நாடகத்திற்கு வரவேண்டிய நிவாரணம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story