விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து


விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 5 Sept 2021 3:21 AM IST (Updated: 5 Sept 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா தலம்

உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுவது வழக்கம். 
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
 தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அதுவும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

படகு போக்குவரதத்து ரத்து

தற்போது தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால் வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் சுற்றுலா தலங்களுக்கும், கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 இதனால் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நேற்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காதவாறு கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story