ரூ.13 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்பு


ரூ.13 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 5 Sept 2021 3:41 AM IST (Updated: 5 Sept 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஒப்படைத்தார்.

தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஒப்படைத்தார்.
130 செல்போன்கள் மீட்பு
தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் போலீஸ் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைவாக கண்டுபிடிக்க தனிக்கவனம் செலுத்தி போலீசாரும், சைபர் கிரைம் போலீசாரும் விரைந்து செயல்பட்டனர். இதன்காரணமாக ரூ.13 லட்சம் மதிப்புடைய 130 செல்போன்கள் மீட்கப்பட்டன.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமாலை நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். பின்னர் அவர் கூறும்போது, செல்போன்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். பண இழப்பு ஏற்படும் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக 155260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மற்ற சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றார்.
போலீசாருக்கு நன்றி
செல்போன்களை பெற்று கொண்டவர்கள் போலீஸ்துறையினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். மேலும் விரைவாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கென்னடி, ரவீந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் கோகுலகண்ணன், பிச்சைமுத்து கண்ணன், சக்திவேல் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Next Story