அரசு வழங்கிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் படுகாயம்


அரசு வழங்கிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் படுகாயம்
x

வாணியம்பாடி அருகே அரசு வழங்கிய சுவர் இடிந்து விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே அரசு வழங்கிய சுவர் இடிந்து விழுந்து பெண் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுவர் இடிந்துவிழுந்து பெண் காயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் கடந்த 1990-ம்  ஆண்டு ஜவகர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 32 வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.

இந்தநிலையில் இன்று இங்குள்ள ஒரு வீட்டில் வசித்துவரும் சரஸ்வதி (வயது 35) என்பவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். 

அப்போது, சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை நீண்ட நேரம் போராடி மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாரிகள் விசாரணை

சுவர் இடிந்துவிழுந்த படுகாயமடைந்த சரஸ்வதியின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்யக்கோரியும், பழைய வீட்டு கட்டிடங்களை புதுப்பித்து தரக் கோரியும் வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அம்பலூர் வருவாய் ஆய்வாளர் சித்ரா, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி உதவியாக அரிசி மற்றும் பொருட்களை வழங்கினர்.

Next Story