கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்


கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Sep 2021 4:28 PM GMT (Updated: 2021-09-05T21:58:43+05:30)

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி, லாரிகள் மூலம் ஐஸ் பெட்டிகளில் அடைத்து எடுத்து செல்வது வழக்கமாகும். 
இது தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் மீன் பிரியர்களும் அதிக அளவில் கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். 

குவிந்த பொதுமக்கள்

இந்த நிலையில் நேற்று கடலூர் துறைமுகத்திற்கு சங்கரா, பாறை, கனவா,  இறால் போன்ற மீன் வகைகளின் வரத்து அதிகமாக இருந்தது. நேற்று அதிகாலை முதலே துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 
இது தவிர ஏராளமான வியாபாரிகளும் வந்து போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுக பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. இதற்கிடையே மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, மீன்களை வாங்கிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். 

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை?

இதற்கிடையே கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மீன் மார்க்கெட், முதுநகர் மீன் அங்காடி, மீன்பிடி துறைமுகம் மற்றும் காரைக்காடு பகுதியில் விற்கப்படும் மீன்களை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் ஆய்வாளர்கள் நல்லதம்பி, சந்திரசேகரன், சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீன்களில் பார்மலின் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். சோதனையில், மீன்களில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்றும், கெட்டுப்போன மீன்கள் விற்கப்படவில்லை என்றும் தெரியவந்தது. இருப்பினும் கெட்டுப்போன மீன்கள் அல்லது ரசாயனம் கலந்த மீன்களை விற்கக்கூடாது என மீன்வியாபாரிகளை அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

Next Story